தொடர்ந்து ட்ரெண்டாகும் ஃபகத் பாசில்… எந்த பாடல் போட்டாலும் செட் ஆகும் “மாமன்னன்” பட வீடியோக்கள்!

மாமன்னன் திரைப்படத்தில் ரத்னவேலு கதாபாத்திரம் தொடர்ந்து வைரலாகி வருகிறது. படத்தின் கதாநாயகனாக ஃபகத் ஃபாசில் கொண்டாடப்பட்டு வருகிறார். எந்த பாடல் போட்டாலும் அவரது வீடியோ பொருந்துவதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மலையாள சினிமா துறையில்…

மாமன்னன் திரைப்படத்தில் ரத்னவேலு கதாபாத்திரம் தொடர்ந்து வைரலாகி வருகிறது. படத்தின் கதாநாயகனாக ஃபகத் ஃபாசில் கொண்டாடப்பட்டு வருகிறார். எந்த பாடல் போட்டாலும் அவரது வீடியோ பொருந்துவதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வென்றவர் ஃபகத் ஃபாசில். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாமன்னன்.   இந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் பிரதிநிதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை, அதே கட்சியில் மாவட்ட செயலாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஃபகத் ஃபாசில் சமூக ரீதியாக ஒடுக்குவதும், மரியாதை குறைவாக நடத்துவதும் போன்ற கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டது. படம் வெளியான பின்னர் இந்த படம் முன்னாள் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை என பரவலாக பேசப்பட்டது. ஆனால், இயக்குநர் மாரி செல்வராஜ் படம் வெளியாவதற்கு முன்னர் பல பேட்டிகளில் இந்த படத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் எனது தந்தையின் வாழ்வில் நடந்துள்ளது எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மாமன்னன் திரைப்படம் சர்ச்சைகளுடனே பயணித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எப்போதும் காமெடி கதாபாத்திரத்தில் மக்களைச் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு, இந்தப் படத்தில் சீரியஸான மாமன்னன் கதாபாத்திரத்தில் கலங்க வைத்துவிட்டார் என ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.

மேலும் சாதி பாகுபாட்டினால் மிருகங்களை வேட்டையாடி கொல்லக் கூடிய அளவிற்கு ஆக்ரோஷமான வில்லனாக மாமன்னன் படத்தில் ஃபகத் பாசில் இடம் பெற்றிருப்பார். அவரும் வடிவேலுவிற்கு இணையாக போட்டி போட்டு நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி இணையதளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அன்றிலிருந்து நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து வந்தது. ஓடிடியில் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் மாமன்னன் படத்தில் ஃபகத் பாசில் கதாபாத்திரமான ரத்னவேலுவை நல்லவர் போல் சித்தரித்து பல வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

தாமிரபரணி படத்திலிருந்து ”கட்டபொம்மன் ஊரெனக்கு” பாடல், பத்து தல படத்திலிருந்து ”நீ சிங்கம் தான்”, தாஜ்மஹால் படத்திலிருந்து ”திருப்பாச்சி அருவாள”, நஞ்சுண்டபுரம் படத்தில் வரும் ”ஊருல உனக்கொரு மேடை”, ஜென்டில்மேன் படத்தில் இருந்து ”ஒட்டகத்தை கட்டிக்கோ” பாடல், தவசி படத்தில் ”ஏலே இமயமலை” பாடல், தனி ஒருவன் படத்தில் ”எவனாய் இருந்தால் என்ன” பாடல் என பல்வேறு பாடல்கள் மேஷப் எடிட் செய்யப்பட்டு நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஓடிடியில் மாமன்னன் வெளியானது முதல் ட்விட்டர், ஃபேஸ்புக் என எங்கு பார்த்தாலும் ரத்னவேலு வீடியோக்கள் ட்ரெண்டாகின. முன்னதாக இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் பேசிய ‘என்ன பழக்கம் நா இது’ என்ற வசனமும் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல ஃபகத் பாசில் ட்ரெண்டாகி இருக்கும் இந்த வேளையில் தற்போது அவரது மாமன்னன் படத்தின் பேசுபொருளான சில போட்டோக்களை ஒன்றிணைத்து ஃபகத் தனது ஃபேஸ்புக் கணக்கின் புகைப்படத்தை மாற்றியுள்ளார். ரசிகர்கள் அந்த பதிவில் அவரது கதாபாத்திரத்தின் பெயருடன் தங்களது சாதி பெயர்களை கமெண்ட் செய்து சண்டை போட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.