சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு இன்று ரூ.720 அதிரடியாக உயர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பதால் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
இந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் இன்று, தங்கத்தின் விலையானது சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 45,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல் கிராமுக்கு 90 ரூபாய் என உயர்ந்து 5,690 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 1,240 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 44,800 ரூபாய்க்கு விற்பனையானது.
இதே போல் வெள்ளியின் விலையும் எதிர்பாராத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு 2,900 ரூபாயாக உயர்ந்து, 80,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








