வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்தார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/annamalai_k/status/1643526317437227009
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து வேளாண் நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு பாஜக சார்பாக கோரிக்கை அளித்தோம். மத்திய அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.







