ராஜஸ்தானில் நடைபெறும் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தியாவில் 9 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதை, நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக அரசின் 9 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் செல்லவுள்ளார். இந்த நிறைவு விழா கூட்டத்தில், பிரதமர் மோடி தனது ஆட்சியின் சாதனைகளையும், ராஜஸ்தான் மாநிலத்திற்காக பாஜக செய்த வளர்ச்சித் திட்டங்களையும் எடுத்துரைக்க உள்ளார். மேலும், பாஜக அரசின் 9-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதிலும் ‘மகா ஜன் சம்பக்’ எனும் பெயரில் கொண்டாடப்படும் விழாவையும் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படியுங்கள் : பொறாமையின் உச்சத்தில் இபிஎஸ் அவதூறு அள்ளித் தெளிக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான முதலமைச்சர் அசோக் கெலட்டின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு 6-வது முறையாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







