மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி – சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவிழாவின் 9ம் நாளான நேற்று மதுரையின் அரசி மீனாட்சியம்மன் மரவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளில் வீதி உலா வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகரம் முழுவதுமே வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி விழாக் கோலம் பூண்டுள்ளது. மேடை முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 10.30 மணி முதல் 10.59 க்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது, திருக்கல்யாணத்திற்கு கட்டணமில்லாமல் வரிசையில் வர மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு வாசலை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருக்கல்யாண விருந்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக சமையல் செய்யப்பட்டுள்ளது. 10 டன் மலர்களாலும் ஒரு டன் பழங்களாலும் கோவில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.







