29.5 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் செய்திகள் சினிமா

புன்னகையால் நம் மனங்களை வென்ற சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று..!


பி.ஜேம்ஸ் லிசா

கட்டுரையாளர்

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட கலைஞன்… ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்… தொளதொள பேண்ட், சிறிய கோட், ஹிட்லர் மீசை, தலைக்கு பொருத்தமான தொப்பி, சிறு தாடி வித்தியாசமான நடை என நம்மை கிச்சுக்கிச்சு மூட்டாமலேயே சிரிக்க வைத்தவர்.

நகைச்சுவை என்ற அருமருந்தால், வாழ்நாள் முழுவதும் நம்மை சிரிக்க வைத்த மகா கலைஞனான சார்லி சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ் – ஹன்னா ஹாரியட் ஹில் என்பவர்களுக்கு மகனாகப் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி ,மகனாக பிறந்தார். இவரது பெற்றோர் இருவருமே, மியூசிக் ஹால் அதாவது மேடை நாடக நடிகர்கள். சார்லி சாப்ளினின் அம்மா ஹன்னா ஹீல் ஏற்கனவே திருமணமாகி சிட்னி என்ற மகன் இருந்த நிலையில், முதல் கணவரிடம் இருந்து பிரிந்து, தன்னுடன் நடித்த, நடிகர் சார்லஸ்ஸை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் சார்லி சாப்ளின். சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்பதுதான் சார்லி சாப்ளினின் முழுப்பெயர். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கையில் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரியவே, பிறகு தனது அம்மாவின் அரவணைப்பில் வளர ஆரம்பித்தார். 1896-ஆம் ஆண்டிற்கு பின்னர் சாப்ளினின் அம்மாவிற்கு மேடை நாடகங்களில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஹான்வெல் என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி ராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928 ஆம் ஆண்டில் இறந்தார். தாய் – தந்தை இருவரையும் இழந்த சாப்ளின் ஐந்து வயதிலேயே, படுத்த படுக்கையாக இருந்த அம்மா ஹாரியாட்டிற்காக, அவர் முன்பு நடிக்க ஆரம்பித்தவர், பிறகு தனது 10-வது வயதில், சகோதரர் சிட்னியுடன் சேர்ந்து, லண்டனில் இருந்த மது அருந்தும் விடுதிகளில், கிடைக்கப்பெற்ற நகைச்சுவை வேடங்களில் நடித்து சம்பாதிக்க தொடங்கி விட்டார். சாப்ளின் குள்ளமான உருவமே, நடிப்புலகில் அவருக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இதற்கிடையே வில்லியம் ஜில்லட்டின் நாடகத்தில் ஒரு பணிப்பையன் வேடம் சாப்ளினுக்கு கிடைத்து, அந்த நாடகத்தில் புகழ் பெற்றது மட்டுமின்றி, அவரது படங்கள் பத்திரிகைகளில் வெளிவர தொடங்கியது. இதையடுத்து சாப்ளின் அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் தான் சாப்ளின் கார்னோ என்ற குழுவுடன் அக்டோபர் 2, 1912 -ஆம் ஆண்டு அமெரிக்க பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் அவரின் வாழ்க்கையில் மிகவும் திருப்பு முனையாக அமைந்தது. இதுதவிர கீஸ்டோன் பிலிம் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத் தயாரிப்பாளர் மாக் செனட் என்பவர், சாப்ளினை தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். முதலில் கீஸ்டோன் நடிப்பு முறை தனக்கு வராது, மிகவும் கஷ்டம் என்று நினைத்த சார்லி சாப்ளின், பிறகு அந்த நடிப்பிற்கு தன்னை பழக்கிக்கொண்டு, மிக விரைவிலேயே அதில் சிறந்த கலைஞராக தன்னை மாற்றிக்கொண்டார். இவரின் இந்த கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையுந்தான்.

இதனையடுத்து சாப்ளின் 1914-ஆம் ஆண்டு முதன் முதலாக மேக்கிங் ஏ லிவிங் என்ற படத்திலும், 2 வதாக கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் என்ற படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் தொளதொள பேண்ட், சிறிய கோட், ஹிட்லர் மீசை, தலைக்கு பொருத்தமான தொப்பி, சிறுதாடி வித்தியாசமான நடை என தனக்கான அடையாளத்தை சாப்ளின் உருவாக்கி கொண்டார். அவரது இந்த வேடத்தினை உலகமே கொண்டாடி மகிழ்ந்தது. மேலும், ஒரே வருடத்தில் 36 படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இந்த வளர்ச்சி 1919 ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் என்ற ஸ்டுடியோவைத் துவங்க வைத்தது.

இதன்பிறகு, 1927ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 1936-ஆம் ஆண்டு மாடர்ன் டைம்ஸ் என்ற ஒலி படத்தை தயாரித்தார். இருந்தும் அந்த படத்தில் பேசாமலேயே நடித்திருந்தார் சாப்ளின். இதையடுத்து 1940 -ஆம் ஆண்டு சாப்ளின் தனது முதல் பேசும் படமான தி கிரேட் டிக்டேட்டர் என்ற படத்தை வெளியிட்டார். இதில் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கைகளை வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். இப்படத்தில் சாப்ளின் இரு வேடங்கள் ஏற்று நடித்திருந்தார். உலகமே பார்த்து அதிர்ந்த சர்வாதிகாரி ஹிட்லரை விமர்சித்து சாப்ளின் உருவாக்கியிருந்த இந்த படம் மக்களிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக சினிமா மீது தீராத மோகம் கொண்ட ஹிட்லர், தன்னை பற்றி விமர்சித்து சாப்ளின் எடுத்திருந்த இந்த படத்தை 2 முறைப் பார்த்தாராம். ஆனால் துளி கூட கோபப் படவில்லையாம்.

மேலும்,1950-க்கு பிறகு, அமெரிக்காவில் சார்லி சாப்ளினுக்கு எதிராக, அமெரிக்க பெண்களை அழிக்கும் காமாந்தகர், இளம் பெண்களை தன் வலையில் சிக்க வைப்பவர், அமெரிக்காவில் ஒரு சாதாரண ஏழையாக நுழைந்து 40 ஆண்டுகளில் கோடிக்கணக்காக சம்பாதித்தவர் போன்ற எண்ணற்ற எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. ஒரு கட்டத்தில் சாப்ளினே வெளியேறு என்ற பதாகைகளை ஏந்தியபடி, திரையரங்கங்களின் முன் போராட்டத்தில் இடப்படும் அளவுக்கு அமெரிக்கர்களின் எதிர்ப்புகளை பெற்று வந்தார்.

இருந்தும், நடிப்பு ,தயாரிப்பு, இசை நுணுக்கங்கள் என சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்த சாப்ளின், 1952 ஆம் ஆண்டில் தி லைம் லைட் என்ற படத்தில் நடன அமைப்பினை தானே சொந்தமாக செய்திருந்தார். இப்படம் மிகவும் புகழ்பெற்ற படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விடுமுறைக்காக சாப்ளின் இங்கிலாந்து சென்றார். இதுதான் சரியான நேரம் என நினைத்த அமெரிக்கா, தஞல நாட்டின் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி, சாப்ளின் இனி அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது என தடை விதித்தது. மேலும், ஹாலிவுட் வாக் ஆப் ப்ரேம் என்ற நட்சத்திர பட்டியலில் இருந்தும் சாப்ளினின் பெயரை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் சிறிதும் மனம் தளராத சாப்ளின், சுவிட்சர்லாந்தில் குடியேறி தன் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்தார்.தொடர்ந்து மக்களிடையே சாப்ளினுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அமெரிக்கா சார்லி சாப்ளினின் சாதனையை எப்போதும் முறியடிக்கவோ, மறுக்கவோ முடியாது என்பதை உணர்ந்து 1972 டில் மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து மட்டுமின்றி, அங்கு நடத்தப்பட்ட அகாடமி விருது விழாவில், பங்கேற்க செய்து, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் எந்த நட்சத்திர பட்டியலில் இருந் உணவரது பெயர் நீக்கப்பட்டதோ, அதே தி ஹோலிவுட் வாக் ஆப் ப்ரேம் என்ற நட்சத்திர பட்டியலில் சாப்ளின் பெயர் சேர்க்கப்பட்டது.

இப்படி பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, மனம் தளராமல், விடா முயற்சியோடு, புகழ்பெற்றவராக வளம் வந்த சாப்ளின், 1928-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான “தி சர்க்கஸ்” என்ற படத்தின் தலைப்பு மற்றும் இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.

சாப்ளின தன் வாழ்க்கை முழுவதும், அழுகையால் மனம் நிரம்பி இருந்தாலும், மக்களுக்கு கண்ணீரைத் தராமல் புன்னகையைப் மட்டுமே பரிசாகத் தந்தவர். திரை முன் தோன்றிவிட்டால் புன்னகையை தவிர வேறு எதையுமே கட்டிக்கொள்ள மாட்டாராம். அப்படிப்பட்ட இந்த மகா கலைஞன் தனிப்பட்ட வாழ்ககையில் 4 முறை திருமணம் செய்திருக்கிறார். முதன் முறையாக தந்து 28-வது வயதில், 16 வயது கொண்ட மில்ட்ரெட் ‘ஹாரிசை’ மணந்தார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்து போனது. இதன் பிறகு இவர்களது திருமண வாழ்க்கையிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 1920-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இதனையடுத்து தனது 35- வது வயதில், 16 வயது உடைய லீடா க்ரே மீது காதல் கொண்டு,திருமணத்திற்கு முன்பாகவே க்ரே கர்ப்பமான நிலையில், 1924-ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கையும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. விரைவிலேயே விவாகரத்தில் முடிந்ததது. இந்த விவாகரத்தினாலும், வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்டார் சாப்ளின். இதனை தொடர்ந்து 1936-ஆம் ஆண்டு சாப்ளின், தனது 47-வது வயதில் பாலட் கொடார்ட் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்கள் கழித்து, திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இந்த நேரம் ஜோன் பேரி என்ற நடிகையுடன், சாப்ளினுக்கு ரகசிய உறவு ஏற்பட்டு அந்த உறவும் முறிந்து போனது. ஆனால் 1943-ம் ஆண்டு, நடிகை ஜோன் பேரி, தனது குழந்தைக்கு சாப்ளின் தான் தந்தை என வழக்கு தொடர்ந்து, ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் சாப்ளின் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டாலும், அந்த காலத்தில் ரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதன் பிறகு, சாப்ளின் தனது 54-வது வயதில் ஓ நீல் என்ற 17 வயதுப் பெண்ணை திருமணம் செய்தார். ஒன்று ரகசிய உறவு என்றாலும், மற்ற மூன்று திருமண வாழ்க்கைக்கு பிறகு, ஓ நீலுடன் 4-வதாக ஏற்பட்ட இத்திருமண வாழ்க்கைதான் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் நீடித்தது. இந்த தம்பதிகளுக்கு 8 குழந்தைகள் பிறந்தனர். 54 வயதிற்கு பிறகு சந்தோசமான திருமண வாழக்கையை வாழ ஆரம்பித்த சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று அவரது 88-வது வயதில், சுவிட்சர்லாந்தில் உள்ள வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால், சாப்ளினின் உறவினர்களிடம் இருந்து பணம் பறிப்பதற்காக, அவரது உடல், அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து கடத்தி செல்லப்பட்டதாக அந்த சமயம் சர்ச்சைகளும் எழுந்தது. இந்த சர்ச்சையில் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். பிறகு 11 வாரங்களுக்குப் பிறகு ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடல் கைப்பற்றப்பட்டு, மீண்டும் வேவேவில் அடக்கம் செய்யப்பட்டது.

சாப்ளினுடைய வாழ்க்கை என்பது தரையில் இருந்து சிகரத்தைத் தொட்ட சாதாரண வாழ்க்கை இல்லை. பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றிக் காட்டிய சாகச வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம், புகழ் பெற்று, வாழ்நாள் முழுவதும் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, இன்றுவரை அழியா புகழ்பெற்றவராக, எல்லோரது மனங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் சார்லி சாப்ளின் பிறந்த தினத்தில் அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading