மக்களுக்காக ஓயாது உழைக்க வேண்டும்; தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்

மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், பொதுவாக,…

மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், பொதுவாக, அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களின் வழக்கம். அரசு அலுவலகங்கள் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளால் பயன்பெறக்கூடிய மக்களைத் தேடிச் சென்றால், எந்த அளவு பணிகள் நிறைவேறியிருக்கின்றன என்பதை, காகிதத்தைவிட களம் தெளிவாகக் காட்டிவிடும் என்பதால் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அதிக அளவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

ஆட்சிப் பொறுப்பு தங்கத் தாம்பாளத்தில் வைத்து நமக்கு வழங்கப்படவில்லை. கடுமையான உழைப்பின் விளைவு இது. மக்களின் நம்பிக்கைக்குரிய வகையிலே ஆட்சியின் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களாக வெளிப்பட்டு வருகிறது.

ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத் தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன்! என்ற கண்டிப்பையும் தெரிவித்தேன்.

திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சர்வாதிகாரியாக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன். திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதன் சமூகநீதிக் கொள்கையையும் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளவர்களன்றோ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்!

திமுக அரசு வழங்கும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளாட்சிகள் திகழட்டும். அந்த நம்பிக்கையுடன், முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் பங்கேற்ற முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்வுடன் சேலத்திற்கு வந்து, சென்னைக்குத் திரும்பினேன்

நாமக்கல் மாநாட்டில் நான் சொன்னதுபோல, தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம் என்பதற்கேற்ப கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும், அவை மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன. அதன் நோக்கம், மக்களைச் சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம் ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.