“கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு…” – உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டி!

கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அன்புமணி செயல்பாடுகள் இருப்பதாக உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

“டிராவில் முடிந்த பேச்சு வார்த்தை”

எனக்கும் செயல்தலைவருக்கும் நடக்கும் பிரச்சனைகள் முழுவதும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சிறந்த ஆளுமைகள் உள்ள 2 பேரின் சமரச பேச்சு வார்த்தைகள் டிராவில் முடிந்து விட்டது. 16 பஞ்சாயத்துகள் நடந்தது. நான் தொடங்கிய 34 அமைப்புகள் எனக்கு பஞ்சாயத்து பண்ண வந்தார்கள். இது தான் தலைவிதி என்பதா? என நொந்து கொண்டேன். ராமதாஸ் இங்கேயே இருந்து கட்சியை வளர்ப்பது. அன்புமணி வெளியே சென்று மக்களை பார்ப்பது என்று தான் பஞ்சாயத்து பேச வந்தவர்கள் தீர்ப்பு கூறினார்கள்.

 “நீயா நானா”

மாநாட்டு மேடையிலேயே தலைவர் பதவியை  எழுதி தர நான் தயாராகவே இருந்தேன். அதன் பிறகு என்னுள் இருந்த கோபம் வெளியே வந்து நீயா நானா என பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். கேட்டை சாத்திக் கொண்டு கொள்ளு பேர பிள்ளைகளுடன் இருக்கட்டும் என கூறிவிட்டார். அப்படி கேட்டை சாத்தி கொண்டு என்னால் இருக்க முடியாது. 46 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சியை இன்னும் ஒரீரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா? என கேட்கவே அவமானமாக உள்ளது.

“தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது”

கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளது.  மாவட்ட செயலாளர்கள் என்னை பார்க்ககூடாது என அவர்களிடம் தெரிவித்து என்னை மானபங்கம் செய்கிறார். அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் வந்து இருக்கும். தந்தைக்கு பிறகே தனையன்.அன்புமணி குருவுக்கு மிஞ்சிய சீடனாக இருக்கலாம். ஆனால், தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது. இதுவே உலளவில் நீதியாகவும், சாஸ்திர சம்பிரதாயமாகும்.

 “அவமானப்படுத்துகிறார்கள்”

என்னை குலசாமி என கூறி என் நெஞ்சில் குத்துகிறார்கள். என்னை அகல பாதாளத்தில் தள்ளுகிறார்கள். என் தெய்வம் என கூறிக்கொண்டு, அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகின்றனர், குறிவைத்து தாக்குகின்றனர். 7 வருடத்திற்கு முன் மோடி பதவியேற்புக்கு நான் டெல்லி சென்றேன். நான், அன்புமணி, ஜி.கே.மணி சென்றிருந்தோம். அப்போது அன்புமணி சொன்ன வார்த்தை அப்பா நான் கட்சியை பார்த்துக் கொள்கிறேன்
என கூறி விட்டு நான் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என அப்போது கூறினார். 6 வருடங்களுக்கு முன்பே அவருக்கு இது போன்ற எண்ணம் இருந்துள்ளது. அதன்பிறகு அவர் எப்படி தலைவர் ஆனார் என்பது உங்களுக்கு தெரியும்

இவ்வாறு பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.