சுற்றுலாத் துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன்

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த துறையின் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் முதல் ஆய்வு கூட்டம்…

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த துறையின் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் முதல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கொரோனா தொற்றால் கடந்த 18 மாதம் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையால் சுற்றுலாத் துறை சரி செய்யப்படும். கன்னியாகுமரியில் தமிழ் பண்பாட்டிற்கு அடையாளமாக உள்ள திருவள்ளுவர் சிலையை, இரவிலும் கண்டுகளிக்கும் வகையில் சீரொலி சீர்மிகு காட்சி ( land mark lighting and projection) அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், பூம்புகார் சுற்றுலா வளாகத்தை தமிழ் ஆர்வலர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, திட்ட அறிக்கை தயார் செய்ய மதிவேந்தன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் தடை செய்யப்பட்டள்ளது. இதனை மேம்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு, வல்லுனர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனாவிற்கு பிறகு சென்னை மட்டுமல்ல தமிழகத்தையே சிங்காரமாக்குவோம் எனவும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.