#TNSTC – அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவுகளில் புதிய உச்சம்!

விழாக்காலத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் TNSTC பயணிகள் முன்பதிவுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு…

#TNSTC - Govt express bus bookings hit new peak!

விழாக்காலத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் TNSTC பயணிகள் முன்பதிவுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் முன்பதிவு செய்வோருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால், முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (செப்.4) மட்டும் 35140 பேர் முன்பதிவு செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சொந்த ஊர் சென்று திரும்ப, வார இறுதி நாள்களில் பயணிப்பது போன்ற காரணங்களுக்காக 35,140 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நாளில் நடைபெற்ற முன்பதிவில் இதுவே அதிகமாகும். இதற்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி 32,910 எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்றிருந்தது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறைச் செயலர் பணீந்திர ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“ஆன்லைன் முன்பதிவுகள் 35140 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். இவ்வாறு முன்பதிவு அதிகரிப்பதை கணக்கில் கொள்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் பேருந்து இயக்கத்தை சீரிய முறையில் திட்டமிட முடியும்” என போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.