முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

தமிழகத்தில் புத்தெழுச்சி பெற்றுள்ள காங்கிரஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு 25 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இந்த எண்ணிக்கை காங்கிரஸார் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தினாலும் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த புத்தெழுச்சி இனிவரும் தேர்தலில் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க இது எந்த வகையில் உதவும் என்பதை பார்ப்போம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் 8 எம்பிக்களை வைத்திருக்கும் கட்சிக்கு இவ்வளவு குறைந்த தொகுதிகளா? இது தான் காங்கிரசார் தொகுதிப் பங்கீட்டின் போது திமுகவிடம் முன்வைத்த கேள்வி? ஆனால் காங்சிரசின் வெற்றி அக்கட்சியின் மனக் கவலைகளுக்கு மருந்திட்டிருக்கிறது..

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரம் செலுத்திய கட்சி காங்கிரஸ். 1967க்குப் பின்னர், அதன் தனி ஆவர்த்தனமும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் எடுபடவில்லை. திராவிட கட்சிகளின் எழுச்சியால் காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக, திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சியாகவே மாறிப் போனது காங்கிரஸ்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்று காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து முழங்கினாலும் அது கனவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து பார்த்தோம் என்றால், அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. 2016ல் திமுகவின் ஆட்சிக் கனவு பறிபோக, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசின் தோல்வியும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழநாட்டில் வலுவான கூட்டணியை உருவாக்கிய மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். அந்த தேர்தல் முடிவு திமுகவுக்கு மட்டுமல்ல, காங்கிரசுக்கும் புத்தெழுச்சியைக் கொடுத்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8ல் வெற்றி வாகை சூடியது.

இதே உத்வேகத்துடன் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாரானது. ராகுல் காந்தியை முன்நிறுத்தி ஒரு கை பார்ப்போம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. கொங்கு, மதுரை, தென் மண்டலங்களை வலம் வந்த ராகுல், காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெம்பூட்டினார். என்றாலும் அக்கட்சி கோரிய தொகுதிகள் கிடைக்கவில்லையே என்ற ஒரு மனக்கசப்பு தொண்டர்களிடம் உருவானது.

ராகுல் காந்தி வரை நீடித்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் 25 தொகுதிகளில் சமாதானம் அடைந்தது. தேர்தலில் காட்டிய கடுமையான உழைப்பின் மூலம் 18 தொகுதிகளில் வெற்றி மாலை சூடி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் பெற்ற வாக்கு விகிதம் 4.27 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசின் வெற்றி சதவிகிதம் 72. 2016-ல் 8 எம்எல்ஏக்களையே பெற்றிருந்த காங்கிரசுக்கு இப்போது 18 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்கிறார்கள். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜகவையும் தேர்தல் களத்தில் எதிர்கொண்டு வெற்றியை ஈட்டி இருக்கிறது காங்கிரஸ். சென்னை, வடக்கு, கொங்கு மண்டலம், தென் மண்டலம் என பரவலாக வெற்றியை ஈட்டி, தமிழகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.

காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் சோர்ந்துபோகிறதோ, அப்போதெல்லாம் கை கொடுப்பதாகவே தமிழ்நாடு இருந்திருக்கிறது. இப்போதும் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக குமுறிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. காங்கிரசாரின் கூட்டு உழைப்புக்கும், திமுகவின் கூட்டணி பலத்திற்கும் கிடைத்த வெற்றி இது என கூறி உளமகிழ்ந்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி காங்கிரசுக்கு நிச்சயம் புது எழுச்சியை அளிக்கும். அதனைக் கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக உழைத்தால் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அவர்களுடைய உழைப்பு பிரதிபலிக்கும். என்றாலும் காங்கிரஸ் செல்ல வேண்டிய தூரமும், வெல்ல வேண்டிய மனங்களும் அதிகம். ஏனென்றால் அந்த கட்சி தமிழகத்தை ஆண்ட கட்சி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

EZHILARASAN D

ஹீரோவாக அறிமுகமாகும் ரக்‌ஷன்

G SaravanaKumar

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது துணிவு, வாரிசு! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Jayasheeba