பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் நான் மக்கள் பிரதிநிதி கிடையாது உண்மையாகவே நான் மக்கள் பிரதிநிதிதான் என மக்கள் நீதி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டர். அப்போது பேசிய கமல்ஹாசன், “தேர்தலின் போது அளிக்கும் இலவசங்களைப் பெற்று அடுத்த 5 ஆண்டுகளைக் குத்தகைக்கு அளித்து விட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார். இருகட்சிகளும் ஒருவர்மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுகளை நம்பி, தேர்தலில் வாக்களித்து ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒருமுறை தங்கள் மனதைக் கேட்டு வாக்களியுங்கள்.
விவசாயத்தை விஞ்ஞானிகள் கையில் கொடுக்க வேண்டுமே தவிர வியாபாரிகளின் கையில் கொடுக்கக்கூடாது. எங்களுடைய தேர்தல் அறிக்கை மக்களுக்காக எழுதப்பட்டது. என் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என உத்தரவாதம் கொடுக்க முடியாது. தவறு செய்வர்கள் மீது என்னால் நடவடிக்கை எடுக்க முடியும். அதை ஒப்புக்கொண்டு தான் ம.நீ.ம அனைவரும் இருக்கிறார்கள். நான் பேசும்போது தனிமனித தாக்குதல் செய்கிறேன் என்கிறார்கள். மேடையில் ஒருமையில் பேசுகிறோம் என்றால் அவர்கள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். குற்றவாளிகளை ஒருமையில் தான் பேசுவேன். அந்த அவமானத்தை அவர்கள் ஏற்றுதான் ஆக வேண்டும் என்றார்.
விருந்தாளிக்குக் காலில் அடிப்பட்டு விட்டதாக வானதி சீனிவாசன் பழங்களை அனுப்பி வைத்தார். ஆனால் வானதி சீனிவாசனும் விருந்தாளிதான் . கோவைக்கு வந்த எனக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டியதில்லை. ஆனால் உங்கள் பாஜக தலைவர்கள் வந்த போது ‘Goback’ என்று சொல்கிறார்கள் என்று சாடிய கமல்ஹாசன் இராமநாதபுரத்தில் பிறந்து, பரமக்குடியில் வளர்ந்து, சென்னை, மும்பை சென்று தற்போது கோவை வந்துள்ளேன். எனக்கு யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பேசி பொதுக்கூட்டத்தை நிறைவு செய்தார்.







