முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி

தமிழ்நாட்டில் பொது ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோயில்களை திறக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் உள்ள கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த நிலம் அரசு சார்பில் மீட்கப்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை வருகை தந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீட்கப்பட்ட அரசு நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது;

“திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது என்ற திரைப்படப் பாடல் போல கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களின் தலையீடால் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ஞ்ச் கோயில் நிலத்தைக் கூட அபகரிக்க இந்த ஆட்சி அனுமதிக்காது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்திருந்தாலோ, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்திருந்தாலோ தாங்களாக முன் வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தானாக முன்வந்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். நில அபகரிப்பில் அவருக்குள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் அரசிடம் உள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் அந்த ஆதாரங்கள் வெளியிடப்படும். எனவே இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோயிலுக்கு சொந்தமான எந்தெந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா அரசுக்கு வழங்க வேண்டும். அவர் வழங்கும் ஆவணங்கள் அடிப்படையில் நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள கோயில்களை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்”
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி முன்னிலை

Halley Karthik

நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகிறது: சோனியா காந்தி

Arivazhagan CM

தமிழகத்தில் பணவீக்க விகிதம் குறைவுக்கு காரணம் என்ன தெரியுமா?

Ezhilarasan