உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏழு மாதங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏழு மாதங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. அதுபோலவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாத நிலையே நீடித்து வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்  நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏழு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோலவே, விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த 35 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.