தொழில், கல்வி நிறுவனங்கள் அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம்

தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டத்தை விரிவுபடுத்த அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தை…

தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டத்தை விரிவுபடுத்த அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள, வருவாய் நிலை ஆணைகள், புதிய நில பரிமாற்ற வழிகாட்டுதலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஐந்து நபர் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளை ஏற்று இந்த வழிகாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “பொதுவாக தனியார் நிறுவனங்கள் விரிவாக்க பணிகளின்போது, அருகே அரசு நிலங்கள் இருப்பதால் தொய்வு ஏற்படுகிறது. இதனால் பலர் விரிவாக்க பணிகளை செயல்படுத்த முடியாத சிக்கலில் உள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் அரசு நிலத்தை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு பதிலாக அந்த நிறுவனங்கள் வேறு பகுதியில் அதே அளவிலான இடத்தை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் தனியார் நிறுவனம், அரசு இருவரும்ப பயனடைவார்கள். இது விவசாயம், விவசாயம் அல்லாத திட்டங்களுக்கு பொருந்தும். அதேநேரத்தில் நீர்நிலைகளுக்கு இது பொருந்தாது. ஒருவேளை இடைத்தாங்கல் மண்டலம், மலைப்பகுதி, யானை மற்றும் புலி வழித்தடங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இந்த சூழல் வந்தால் அது வனத்துறை மூலம் கையாளப்படும். முக்கியமாக, புறம்போக்கு நிலம் பகுதியாகவோ, முழுமையாகவோ தனியார் நிறுவனத்திடம் சிக்கியிருக்கும்பட்சத்தில், அதே இடத்தில் பட்டா இடம் (அரசுக்கு கொடுக்கும் மாற்று இடம்) கொடுக்கப்பட வேண்டும்.

அப்படி முடியவில்லை என்றால், அந்த இடத்தில் இருந்து 1கி.மீ சுற்றளவில் மாற்று இடம் கொடுக்க வேண்டும். பட்டா நிலத்தின் விலை, அரசு வழிகாட்டுதல் மதிப்புப்படி நிர்ணயம் செய்யப்படும். ஒருவேளை அரசு வழிகாட்டுதல் மதிப்பு, பட்டா நிலத்தின் மதிப்பைவிட குறைவாக இருந்தால், அது பரிமாற்றம் செய்யப்படும் அரசு நிலத்தில் ஈடு செய்யப்படும். அதபோல அரசு நிலத்தின் வழிகாட்டுதல் மதிப்பு பட்டா நிலத்தை விட அதிகமாக இருந்தால், வழங்கப்படும் மாற்று இடத்தில் அதை சமன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த கூடுதல் மதிப்பை பணமாகவோ, நிலத்தின் வழியாகவோ சமன் செய்து கொள்ளலாம்.

முக்கியமாக, விண்ணப்பதாரர் பரிமாற்றம் செய்யப்படும் நிலத்தின், தெளிவான உரிமைகளுடன், மொத்த நிலத்தின் 30 % நிலத்தை மட்டும் விரிவாக்க பணிகளுக்காக பரி மாற்றம் செய்ய முடியும்.” என்றனர். “இந்த புதிய உத்தரவின் மூலம் விரிவாக்க பணிகளை விரைவாக செய்ய முடியும்.” என தனியார் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.