இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு

விசாரணைக் கைதிகளை இரவு விசாரிக்கக் கூடாது என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்னும் இளைஞர் உயிரிழந்தார். விக்னேஷின் உடலை…

விசாரணைக் கைதிகளை இரவு விசாரிக்கக் கூடாது என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்னும் இளைஞர் உயிரிழந்தார். விக்னேஷின் உடலை உறவினர்களைக் கூட பார்க்க விடாமல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  அடக்கம் செய்யப்பட்டது.

இதுபோலவே திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணி என்பவரும் உயிரிழந்தார். காவல்துறையினர் தங்கமணியை அடித்ததால்தான் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலைய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் கைதிகளிடம் இரவு விசாரணை கூடாது என அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.