தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிக அளவு வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் நிலவி வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக சற்று வெப்பம் தணிந்து காணப்படுகிறது. மேலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும், நாளையும், தென் தமிழகம், வட உள் தமிழக மாவட்டங்கள், காரைக்கால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய (கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 5, 6, 7ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை) மாவட்டங்கள், காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய (ஈரோடு, கரூர், மதுரை), கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.








