தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. இதனால், மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோட்டக்கலை துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையொட்டி, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, காய்கறிகள் மற்றும் பழங்களை வியாபாரிகளிடம் தடையின்றி பெற்று விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காய்கறி விற்பனைக்காக 5 ஆயிரத்து 822 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க, அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். காய்கறி, பழங்கள் விநொயோகம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள 044 22253884 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்” என அவர் கூறினார்.







