கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில் சென்னையில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, நள்ளிரவில் காரில் வந்த தம்பதியர் ஆடு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை கொரட்டூர் போத்தியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இந்திராணி, இவர், தனது வீட்டின் முன்பு கட்டிப் போட்டிருந்த ஆடுகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருந்திருந்தார்.
இதன்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கணவன்-மனைவி இருவரும் காரில் வந்து ஆடுகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காரின் பதிவு எண்ணைக் கொண்டு ஆடு திருடிய தம்பதியரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக கறி, கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் பல பகுதிகளில் வார இறுதி நாட்களில் கறி, கோழி இறைச்சி வாங்க பொதுமக்கள் கடைகளைத் தேடி அலைகின்றனர்.
மேலும் ஒரு சில இடங்களில் வீடுகளிலேயே கறி, கோழி மறைமுகமாக விற்பனைச் செய்யப்படுகிறது. இந்நிலையில் காரில் வந்து தம்பதியர் ஆடு திருடிய சம்பவம் ‘கண்ணாத்தாள்’ திரைப்படத்தில் ஆடு திருடும் வடிவேலு கதாபாத்திரமான சூனா பானாவை நினைவுபடுத்துகிறது.







