உழவு இயந்திரத்துடன் விவசாய தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முரளி என்பவருக்கு, குலதீபமங்கலம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள முரளி, நிலத்தை உழுதுவிட்டு, டிராக்டரை, அருகே உள்ள பாக்கியராஜ் என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வந்துள்ளார். காலையில் சென்று பார்த்தபோது, உழவு இயந்திரத்துடன் டிராக்டர் மாயமாகியிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, ஜா.சித்தாமூர் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக, டிராக்டர் மற்றும் ரொட்டவேட்டர் இயந்திரத்துடன் வந்த இளைஞரை மடக்கி விசாரித்தபோது, அவர் கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும் முரளிக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் ரொட்டவேட்டர் இயந்திரத்தை திருடியதும் தெரியவந்தது. விசாரணையில், 2018-ம் ஆண்டு, வளவனூர் பகுதியில் கலி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை அவர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்