மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரனோ தடுப்பூசிகளை வழங்குவதில் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கூடுதல் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கோவின் செயலியில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் பெரும்பாலான மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன நிலையில் மீதம் உள்ள தனியார் மருத்துவமனைகளும் பதிவு செய்ய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும் அந்த காலங்களில் வழக்கமாக தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை பொறுத்து மட்டுமே வரும் காலங்களிலும் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் தடுப்பூசிகளின் தேவை குறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பதிவுசெய்யும் பட்சத்தில் கோரிக்கையை அளித்த மூன்று நாட்களுக்குள் தடுப்பூசிக்கான தொகையை அந்த மருத்துவமனைகள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் தினசரி தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவலை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பான கூடுதல் வழிகாட்டுதல்களை பெற தனியார் மருத்துவமனைகள் 0120 – 4473222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







