கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வருவதால், கூடுதல் தளர்வுகள் இல்லாமல் மேலும் ஒரு ஒருவாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கு…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வருவதால், கூடுதல் தளர்வுகள் இல்லாமல் மேலும் ஒரு ஒருவாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தற்போதைய கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்டங்களில் நிலவும் கொரோனா தொற்றின் தாக்கம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நிலவும் நோய் தொற்றின் தாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன் மேலும் ஒருவாரங்களுக்கு ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
“கொரோனா தொற்றுத் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவு கூட்டம் கூடும் பகுதிகளை மூடுவது குறித்தும் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம்.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்த வேண்டும். உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் முக க்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடைகள் உரிய காற்றோட்ட வசதியுடன், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவும் வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய் தொற்றுக்கு உள்ளானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

நோய் கட்டுப்பாடு பகுதிகளை மைக்ரோ அளவில் வரையறுத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வீடு வீடாக சென்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மூன்றாம் அலை வராமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்றுத் தடுப்பு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.” இவ்வாறு முதலமைச்சர் மு.கஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.