தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை; ஆளுநர் உரை!

தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர்…

தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது தொழில் வளர்ச்சி குறித்து உரையாற்றிய ஆளுநர், தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் எனக்குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சென்னை – கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும் சென்னை – பெங்களூர் தொழில் பெருவழியிலும் தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களிலும் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களின் நெருக்கடியை குறைக்க, புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய துணை நகரங்கள் உருவாக்கப்படும் எனவும், மண்டலம் வாரியாக திட்டங்கள் வகுக்கப்படும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.