மதுரை திருமோகூர் பகுதியில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,
”சமூக மரபுகள் சாதிய மரபுகள் சனாதனை மரபுகள் என்ற பண்பாட்டு தலத்தில் நாம் ஏற்படுத்தும் தாக்கம் தான் புரட்சிக்கான புள்ளி. நம்மை ஆண்ட மூவேந்தர்கள் கூட தொட தயங்கும் புள்ளி இந்த புள்ளி தான். நீ நீயாகவே இரு நான் நானாகவே இருக்கிறேன் என்கிற நிலை காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையை மீறுவது தான் காதல். இதனை உடைக்கும் சக்தி காதலுக்கு உள்ளது. அது இயற்கையாக வருகிறது.
சனாதன விதிகளை மீறியதால் தான் காத்தவராயன் அன்று கொல்லப்பட்டார். சிவபெருமான் கூட சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக இருந்து உள்ளார் என்கிறது புராணம். ஆணவ படுகொலைக்கு பலியானவர்கள் தான் மதுரை வீரன், காத்தவராயன் போன்றவர்கள். ஆணவ படுகொலையில் தப்பித்தது முருகன் தான் அவர் வள்ளி என்ற மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்தார். முருகன் செய்தது சனாதான கொள்கைக்கு எதிரான சாதி மறுப்பு திருமணம் தான்.
லவ் ஜிஹாத், மதமாற்றம் மாட்டு இறைச்சி உண்ணுதல் போன்ற யுக்திகளை கையாண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்து அதன் மூலம் இந்து சமூகத்தின் ஆதரவை திரட்டி வருகிறார்கள். சாதி பெருமை பேச பேச மத உணர்வு வளரும். தற்போது சிலர் கடப்பாறைகளை தூக்கிக்கொண்டு களத்துக்கு வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல்.
திருப்பரங்குன்றம் விவகாரம் திட்டமிட்ட ஒன்று. தேர்தலுக்கு முன்பாக சாதி பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை நடத்த வாய்ப்பு உள்ளது. வழக்கமான உச்சி பிள்ளையார் கோவிலில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அப்படித்தான் ஏற்றப்பட்டது. 1926 ஆண்டு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்ப்பு வைத்து விட்டார் நீதிபதி ராமையர். ஆனால் நீதித்துறையில் இருப்பவர்களே வலிந்து வந்து இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக தீர்ப்புகளை எழுதுகிறார்கள்.
பாஜக, சங்கபரிவார்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு அதிமுக போன்ற கட்சிகள் துணை நிற்கின்றது. தேர்தல் வரும் போகும் எத்தனை இடங்களில் போட்டி இடுகிறோம் எதில் வெற்றி பெறுகிறோம் என்பது பிரச்சனை இல்லை.. ஆனால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும் என்பது தான் நமது கொள்கையாக இருக்க வேண்டும்” என்றார்.







