விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், ஆண்டுதோறும் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் 16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்க, நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த, தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், மத்திய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடனான பேச்சுவார்த்தையை தமிழக அரசு தொடங்கும் எனவும் கூறினார். வேளாண் உற்பத்தியை பெருக்க ஆண்டுதோறும் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.







