விஜய் பிறந்தநாள் மற்றும் விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என டபுள் கொண்டாட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருபுறம் இவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மற்றொருபுறம் அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.
2019-ல் ஹெச்.வினோத் அஜித்குமார் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானால், அன்று அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி தான். உலகளவில் அந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்யாமல் விடமாட்டர்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டுக்காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.
வலிமை திரைப்படத்தின் தயரிப்பாளரான போனிகபூர் ட்விட்டர் பதிவுகளில் தொடங்கி பிரதமர் சென்னை வருகை வரை வலிமை படத்தின் அப்டேட் வேண்டுமென அஜித் ரசிகர்கள் செய்த ரகளைகள், வலிமை படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என்றே சொல்லலாம். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், 2021 சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றி பெற்றால் நிச்சயம் வலிமை படத்தின் அப்டேட் வாங்கி தருவதாக ட்விட்டரில் பதிவு செய்தார். அதேநேரத்தில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நடிகர் அஜித்திடம் இருந்து வலிமை அப்டேட் வந்தது.
ஆனால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றைத்தையே தந்தது. தனது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் அரசு, அரசியல், விளையாட்டு சார்ந்த இடங்களில் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என கேட்கும் செயல் எனக்கு வருத்ததை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். வலிமை படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளருடன் கலந்து ஆலோசனை செய்து உரிய நேரத்தில் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அஜித் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சிறிதுகாலம் அமைதியாக இருந்த அஜித் ரசிகர்கள், தற்போது மீண்டும் வலிமை படத்தின் அப்டேட் கேட்க தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தமிழக வீரர் அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்டு குறும்பு செய்துள்ளனர். இந்த வீடியோ இணைதயளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படி, வலிமை படத்தின் அப்டேடக்காக இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு, தங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அஜித் ரசிர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வலிமை படப்பிடிப்பு மீண்டும் எப்போதும் தொடங்கும்?, படத்தின் அப்டேட் எப்போது கிடைக்கும்? என வழிமேல்விழி வைத்து காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.








