மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வின் கையிலிருந்து காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணாமூல் எம்.பி. சாந்தனு சென் மழைக்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தபோது விளக்கம் அளிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் எழுந்தார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த காகிதங்களை பறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கிழித்து எறிந்தார். இதையடுத்து, அவையில் பெரும் கூச்சல் நிலவியது.

இதனால் அவை நேற்று ஒத்திவகைக்கப்பட்டது. திரிணாமூல் எம்.பி. சாந்தனு செயல் கண்டனத்துக்குரியது என்று பாஜக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அவைகூடியதும் எம்.பி சாந்தனுவை அவையிலிருந்து இடைநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பாக துணை குடியரசுத் தலைவர் மற்றும் அவை தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், மாநிலங்களவையில் நேற்று நடந்த சம்பவங்கள் கவலையளிப்பதாக கூறிய அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து சாந்தனுவை மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement: