சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த கோயிலை தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் 1 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த புதன் கிழமை யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நாள்தோறும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு மேல் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு சென்றனர். மேலும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கும்பாபிஷேக விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஆன்மீகம் தொடர்பான தகவல்களுக்கும், கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பக்தி சார்ந்த நிகழ்ச்சிகளையும் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தே நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் மூலம் நேரலையாக பார்த்து இறையருள் பெறலாம்..
– இரா.நம்பிராஜன்








