திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த அமோனியா கசிவால் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமோனியா கசிவு சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை வரும் ஆகஸ்ட் 31க்குள்ளாக பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதில் அடுத்த விசாரணைத் தேதிக்குக் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக, சென்னையில் உள்ள தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல அமர்வில் தங்களது பதில்கள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கு விசாரணையின் போது தொழில்துறை பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், முறையான எச்சரிக்கை அமைப்பு மற்றும் தீயணைப்பு வசதிகள் இல்லாமை, அத்துடன் ‘ஊழியர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின்’ (ESI) கீழ் பராமரிக்கப்பட வேண்டிய ‘படிவம்-12’ பதிவேடு இல்லாதது ஆகியவை கண்டறிப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
கடந்த ஜுன் 21 ஆம் தேதி நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கு என்பது தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து விபத்து நடைபெற்ற தனியார் நிறுவனத்துக்கு, வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.




