அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுதக் கலாச்சாரம்! : அலட்சியப்படுத்துகிறதா ஆளும் அரசு? – நயினார் நாகேந்திரன்

பள்ளி மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நிர்வாக தோல்வி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, “சிவகங்கை அருகேயுள்ள நிரஞ்சான் என்ற கிராமத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வகுப்பறையிலேயே சக மாணவன் கத்தியால் குத்தியதாகவும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவனை, சக மாணவன் மண்வெட்டியால் தாக்கியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நம்மை பதறச் செய்கின்றன.

அறநெறிகளை போதிக்க வேண்டிய பள்ளிகளில், ஆயுதங்கள் புழங்குவது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமன்றி, ஆரோக்கியமான சமூகத்திற்கும் அழகல்ல. குறிப்பாக, அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே இதுபோன்ற மோதல்கள் தொடர்வது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் நிர்வாகத் தோல்விக்கான சான்றாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

எனவே, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தனியார் பள்ளிகளை “comfortable” ஆக வைத்துக் கொள்வதற்காக மட்டும் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் ராஜ்மோகன், விளிம்புநிலை மக்களின் வரப்பிரசாதமாக விளங்கும் அரசுப் பள்ளிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! அரசுப் பள்ளிகளில் “Conflict management”, “Adaptability” உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்! மேலும், மாணவர்களுக்கு இடையேயான கோப, தாபங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.