தமிழ் நாடு பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்கிற புதிய இயக்கத்தை நிறுவியுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி இந்த இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. ‘போதை இல்லா தமிழ் நாடு’ என்னும் பெயரில் நடைபெற்ற இம்மாநாட்டில் பேசிய அண்ணாமலை வீ த லீடர்ஸ் அமைப்பு நிச்சயம் அரசியல் கட்சியாக மாறும் என்று தெரிவித்தார். இந்த அமைப்பின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் அடுத்த மாநாடு ஜுலை 26 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வீ த லீடர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “”We The Leaders” அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த மாபெரும் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்குப் பதிலாக, வரும் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூக நல நிகழ்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளன. இந்தச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறும் தேதி, இடம் குறித்த முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மாற்றத்தை நோக்கி நம்மோடு பயணிக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றி! மாறுவோம்! மாற்றுவோம்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




