திருப்பூர் முருகம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்றாவிட்டால் சட்டமன்றத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகம் கடந்த வாரம் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவாதம் அளித்தது .
ஆனால் தற்போதுவரை மதுபான கடை மாற்றப்படாமல் தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் அப்பகுதி மக்கள் தொடர் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல் பெண்கள், மாணவர்கள் மாலை நேரங்களில் வெளியே செல்லமுடியாத பாதுகாப்பற்ற சுழல் உள்ளது. இதன்காரணமாக மதுபான கடையை உடனடியாக அகற்றாவிட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் ஆளும் கட்சி வேட்பாளரை எங்கள் பகுதிக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் முருகம்பாளையம் பகுதி பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.







