இங்கிலாந்துக்கு எதிரான 4-வது இருபது ஓவர் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ராகுல் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலியும் ஒரு ரன்னில் நடையை கட்டினார். மறுமுனையில், அறிமுக வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகப்பட்சமாக பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 40 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 2- 2 என்ற கணக்கில் சமன் செய்தது. 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.







