திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள அரசு எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்தி வருவதாகக் கூறி மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்,ஆர்,ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவிகள் பல்வேறு துறைகளின் கீழ் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.
மேலும் மாணவர்களுக்கான கலந்தாய்வுகளை கல்லூரி நிர்வாகமே நடத்தி தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. பல கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் திருப்பூர் எல்,ஆர்,ஜி கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவித்திருந்த கலந்தாய்வு சில காரணங்களால் திங்கக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த கலந்தாய்வு நடைபெறாததால் ஆத்திரமடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் போராட்டகாரர்களை கல்லூரி வளாகத்திற்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.கல்லூரி நிர்வாகம் விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டமானது கைவிடப்பட்டது.
-வேந்தன்







