உத்தரப்பிரதேசத்தில் அவதேஷ் ராய் கொலை வழக்கில் கேங்ஸ்டரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரிக்கு வாரணாசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஜய் ராயின் சகோதரர் அவதேஷ் ராய் 1991ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக முக்தார் அன்சாரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வாரணாசி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ அஜய் ராய், இந்த தீர்ப்புக்காக குடும்பத்தினர் அனைவரும் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். அந்த காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. அரசுகள் மாறி மாறி வந்த நிலையில், முக்தார் தன்னை பலப்படுத்திக்கொண்டார். ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடினோம். எங்களின் வழக்கறிஞரின் முயற்சியால் முக்தார் அன்சாரி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முக்தார் அன்சாரிக்கு எதிரான 5 வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 வழக்குகளில் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து முறை எம்எல்ஏவான முக்தார் அன்சாரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







