ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், அடையாளம் காணப்படாத உடல்களின் புகைப்படங்கள் பாலாசோரில் உள்ள ஃபக்கிர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்டப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்தனர். தற்போது அந்த பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு தடங்கள் சரிசெய்யப்பட்டு அந்த தடங்களில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீதமுள்ள இரு தடங்களும் தீவிரமாக சீர்செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரு தடங்களும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் இந்த 4 தடங்களிலும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. தற்போது சிதறிக்கிடக்கும் ரயில் பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் நிலைமை சீறாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு புறம் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஃபக்கிர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் அன்சர் அலி தலைமையிலான குழு சென்று கள நிலவரங்களை வழங்கி வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் அன்சர் அலி தெரிவித்ததாவது:
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், அடையாளம் காணப்படாத உடல்களின் புகைப்படங்கள் பாலாசோரில் உள்ள ஃபக்கிர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்டப்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து இதுவரை எந்த விவரமும் கிடைக்கப்பெறாத நபர்களின் உறவினர்கள், புகைப்படங்களை பார்த்து உடல்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.
இந்த அனைத்து புகைப்படங்களிலும் எண் அதாவது நம்பர் வைத்து ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படங்கள் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாகவும் தகவல்கள் வழங்கப்படுகின்றன. உடல்கள் கிடைக்கப்பெறாத உறவினர்கள் பலரும் பல்வேறு இடங்களில் இருந்து வந்து ஏதேனும் ஒரு வகையில் தங்களின் உறவினர்களின் உடல்களை அடையாளம் கண்டு விட மாட்டோமா என காலை முதலே வந்து இந்த புகைப்படங்களை பார்த்து அடையாளம் கண்டு வருகின்றனர். குறிப்பாக ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தான் திரளான மக்கள் திரண்டு வந்து புகைப்படங்களை பார்த்து அடையாளம் கண்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா