திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்திய திருவண்னாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட 16பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் அரியவகை செம்மரங்கள் காணப்படுகின்றன. இவற்றை சட்டவிரோதமாக வெட்டி சமூக விரோதிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக ஆந்திர அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முரளிதர் மேற்பார்வையில்
கடப்பா மாவட்டத்திற்கு உட்பட்ட திப்பிரெட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சிலர் செம்மர கட்டைகளை சுமந்து கொண்டு சென்றனர். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து 17 செம்மர கட்டைகள், ஒரு சரக்கு ஆட்டோ, 2மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைபோல் அன்னமையா மாவட்டத்திற்கு உட்பட்ட சிப்பகொண்டி செம்மரங்களை கடத்திய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ், சிவமணி ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் மட்டும் செம்மரம் வெட்டி கடத்தியதாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு 40 லட்சம் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







