இலங்கையில் திருப்பதி கோயில் – ஆந்திர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த செந்தில் தொண்டமான்!

இலங்கை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தங்கள் நாட்டில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலை கட்டுமாறு, ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

இலங்கை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தங்கள் நாட்டில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலை கட்டுமாறு, ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். அப்போது இருதரப்பு நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டனர். மேலும் ஆடைகள் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இலங்கையில் அதிகளவில் உள்ள நிலையில், வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோயில் அமைக்கவும் கோரிக்கை வைத்தார்.

இந்த சந்திப்பின்போது ஆந்திர முதலமைச்சர், திருப்பதி பெருமாள் சுவாமி சிலையை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவித்தார். சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.