டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்? -தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி ட்வீட்

டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்? என  தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய் எனவும், தனி திரையரங்குகளில் 120 ரூபாய்…

டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்? என  தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய் எனவும், தனி திரையரங்குகளில் 120 ரூபாய் எனவும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2017ஆம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசிற்கு சில கோரிக்கைகளை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது;

கடந்த 16.10.2017 அன்று தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதம் நிர்ணயித்து ஆணையிட்டது. இது நடந்து 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்கண்டவாறு கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மல்டிபிளக்ஸ் ரூ.250 (ஏசி) ரூ.150(ஏசி வசதி இல்லாதது)

மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட மற்ற பகுதிகள் ரூ.200 (ஏசி) ரூ.120(ஏசி வசதி இல்லாதது)

IMAX ரூ.450

Epiq ரூ.400

Recliner seat வசதி கொண்ட திரையரங்குகள் ரூ.350 இவ்வாறு அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ஏற்கெனவே திரையரங்கிற்குள் வருபவர்கள் விலைவாசியால் ஹோம் தியேட்டருக்குள் புகுந்துகொண்டிருக்கிறார்கள். இன்னமும் டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்??! சிறிய படங்களின் நிலை என்னாகும்..?! அரசும், திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்கிற்கு வருபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இதை தவிர்க்க வேண்டும்”  என தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.