முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

‘திருப்பத்தூர் படுகொலைகளும்’ – ‘மருது பாண்டியர்களின் வீரமும்’


பொன்.முத்துராமலிங்கம், பி.எ., பி.எல்., ( முன்னாள் அமைச்சர்-தி.மு.க.)

கட்டுரையாளர்

லகமக்களை அதிர்ச்சியால் திரும்பிப்பார்க்க வைத்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தின் செயல்களையும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் படுகொலைகள் குறித்தும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் தொகுத்து வழங்கியுள்ளார். தென்னகத்தின் இந்தப் போர்களங்கள் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்டம் என அறிவிக்கவும், அது தொடர்பான அருங்காட்சியகம் அமைப்பதற்கும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அப்படி திருப்பத்தூர் படுகொலையில் நடந்தது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்…

 

1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள் தொடங்கி தொடர்ந்து ஜெனரல் அக்னியூ தலைமையில் மாமன்னர் மருதுபாண்டிய சகோதர்களையும் அவர்களது ஆங்கில எதிர்ப்பு போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகளையும், மருதுபாண்டியர்களின் ஆண் வாரிசுகளான 10 வயது, 12 வயதே நிரம்பிய பாலர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் நிகழ்ந்த கொடுமையான, கோரமான, ஒப்பீடு சொல்லவியலாத வரலாற்று நிகழ்வுகளாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்தகைய குருதிகொப்பளிக்கும் நிகழ்வுகளை நேரில்கண்ட ஆங்கில ராணுவ அதிகாரி வெல்ஸ் (Colonel James Welsh) என்பர் தான் ஒரு ராணுவ அதிகாரி என்பதால் அந்தக் கொடுமையான நிகழ்ச்சிகளின் கோரவடிவங்களை ராணுவச்சட்டப்படி பொதுவெளியில் தெரிவிக்க இயலாமையால், தான் லண்டன் மாநகரம் சென்றபின் அங்குள்ள ஸ்காட்லாந்தைச் சார்ந்த அன்றைய புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே.கோர்லேயிடம் எடுத்துச்சொல்லி அவர்மூலமாக 1813-ல் ஜே.கோர்லே எழுதி லண்டனில் வெளிவந்த “MAHRADU AN INDIAN STORY OF THE BEGINING OF THE NINTEENTH CENTURY” by J.Gourcay, Esq. (Printed for the Author, 40 Suffolk Street, Charing Cross) ஆங்கில புத்தகத்தில் உலகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான இந்தப் படுகொலைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

 

அந்தப் புத்தகத்தின் முகவுரையில் ஆசிரியர் கோர்லே குறிப்பிடும் செய்தி, ஆழமாகச் சிந்தித்து ஆய்வு செய்யவேண்டிய மிக முக்கியமான குறிப்பாகும். “என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பணி சில நோக்கங்களை உள்ளடக்கிய ஓர் கடினமான பணியாகும் (Endeavour). நான் இந்தப் புத்தகத்தில் விவரிக்கவிருக்கும் செய்திகள் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆங்கில கம்பெனி ராணுவத்தில் உயர்பதவியில் பணியாற்றிய அதிகாரி தெரிவித்ததாகும். அதுமட்டுமல்ல, நான் விவரிக்கவிருக்கும் கோரமான நிகழ்வுகளை, அந்த நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் நேரில் கண்டவர். அந்த ராணுவ அதிகாரி இறுதியில் புத்தக ஆசிரியர் கோர்லேயிடம் தெரிவித்த வாசகங்கள் ஆழமான பொருள் பொதிந்த வாசகங்களாகும்.

தான் ஒரு ராணுவ அதிகாரி என்பதால் அந்தக் கோர நிகழ்வுகளை வெளியிட இயலாது. ஆனால் அந்தக் கோர நிகழ்வுகளை நீங்கள் (கோர்லே) உலகிற்குச் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் (The particulars of the transaction which in the following pages I have endeavoured to describe, were communicated to me some ten or twelve years ago in India, by an officer well qualified to observe the passing scene, and who had been present during the whole of the service, with this concluding observation-“You are able to tell this story to the world, I am not.”).

 

ஆங்கில ராணுவத்தில் பணியாற்றிய ஓர் ராணுவ அதிகாரியாலேயே சிவகங்கைச்சீமையில், “திருப்பத்தூர்” மண்ணில் நடைபெற்ற கோரக்கொலைகளைப் பொறுக்க முடியாமல் அந்த ராணுவ அதிகாரி லண்டன் சென்றபொழுது புத்தக ஆசிரியர் கோர்லே மூலம் நடைபெற்ற கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்றால், எத்தகைய கொடூரக் கொடுமைகள் இங்கு ஆங்கிலேயர்களால் அரகேற்றப்பட்டிருகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, புத்தக ஆசிரியர் கோர்லே 10, 12 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ராணுவ அதிகாரி தெரிவித்த அந்தச் செய்திகளை, அதுவும் தானே அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்றால் அப்பொழுது இந்த கோர நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளிவரக்கூடாது என்பதில் எத்தகைய அச்சுறுத்தலும், அபாயகரமான சூழ்நிலைகளும் நிலவியிருக்க வேண்டுமென்பதை தாராளமாக அனுமானிக்கலாம்.


இந்தச் செய்திகளை வெளியிட்ட ஆசிரியர் கோர்லே எவ்வளவு பொறுப்புணர்வுடனும், இங்கிலாந்து நாட்டின் நீதி பரிபாலனத்திற்கு தீங்கு வந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த உள்ளார்ந்த பற்றுடன் வெளியிட்டாரே அல்லாமல், இதன் மூலம் தனக்குப் பெருமையும், புகழும் உயர்ந்துவிடும் என்ற சுயநல நோக்கம் அல்ல என்பதை தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் (No merit is claimed for having advocated the cause of these unfortunates. It is a duty irresistibly imposed upon us, and we have discharged it faithfully, into the hands of our country, which is, or used to be, a lover of justice). இந்தக் கொடுமையான, கோரமான, மருதுபாண்டிய சகோதரர்களும், அவர்களது ஆண் வாரிசுகளும், தளபதிகளும், போராளிகளும் சிவகங்கை – திருப்பத்தூர் பகுதிகளில் கண்ணில்கண்ட புளியமரங்களில் எல்லாம் பலநாட்கள் உரிய விசாரணையும் மேலிட ஆணையுமின்றி அழித்தொழிப்பதற்கு ஆங்கிலேயர்களும் இங்குள்ள துரோகிகளும் இணைந்து திட்டமிட்டதுதான் காரணம். இந்தக் கொடூரங்களால் கிடைத்த பயனை எதிரிகளும், துரோகிகளும் பங்கிட்டுக் கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


மைசூர் பகுதியில் திப்புசுல்தான் ஆகிலேயருக்கு எதிரான போரில் 1799-ல் மரணமடைந்த நிலையில், ஆங்கிலேயருடைய முழுக்கவனமும் ஆங்கில ஆதிக்கத்திற்கு அடிபணியாத “ராஜ்யங்கள்” – “பாளையங்கள்” மீது பாய்ந்து, படிப்படியாக “வாரிசு உரிமை”, “வரிபாக்கி”, “ராணுவ உதவி” என சுதேசி மன்னர்களிடம் மற்றும் பாளையக்காரர்களிடம் பிரச்னைகளை உருவாக்குவதும், அந்தப்பிரச்னைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அடிபணியாத அல்லது இசைவு தராதவர்களின் ராஜ்யங்களையும், பாளையங்களையும் ராணுவ பலத்தின் மூலம் ஆக்கிரமிப்பதும், ஆக்கிரமித்து கைவசப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு “பொம்மை ராஜாக்களையும்” போலி ஜமீன்தார்களையும், பாளையக்காரர்களையும் உருவாக்கும் திட்டப்படி ஆங்கிலேயர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்கள். இந்த இருண்ட அரசியல் சூழ்நிலையில்தான் ஆங்கிலேயரின் ராணுவ பலத்திற்கும், துரோகிகளின் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து “சம்புதீபா” என்ற இந்தியப் பகுதியின் தென் இந்திய தீபகற்பத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான “மக்கள் புரட்சியை” ஆம்! ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியை மருதுபாண்டியர்கள் உருவாக்கத் திட்டமிட்டார்கள்.

 

இவர்கள் பிரான்ஸ் நாட்டின் அதிபர் நெப்போலியனிடம், மைசூர் புலி திப்புசுல்தான் மூலம் தொடர்பு வைத்திருந்ததோடு, அமெரிக்க சுதந்திரப்போர் வரலாற்றையும் அறிந்திருந்தார்கள் எனவும் அறியமுடிகிறது. மருதுபாண்டியர்கள் இதற்கான யுத்தக்கூட்டணியும் அமைத்திருந்தார்கள். இந்த விபரங்களையும், நடவடிக்கைகளையும் ஆங்கிலேயர்கள் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டிருந்தார்கள். மைசூர் புலி திப்புசுல்தான் போர்க்களத்தில் இறந்துவிட்டமையாலும் இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்ததாலும், இங்கு ஆகிலேயர்களை எதிர்த்து போர்க்களம் காணவேண்டிய மருதுபாண்டியர்கள் தலைமையிலான போர் கூட்டணிக்கு ஆயுத உதவியோ, ராணுவ உதவியோ கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தீர்க்கமாக அறிந்துதான் ஆயுதமேந்திய மக்கள் புரட்சிக்கு மருதுபாண்டியர்கள் திட்டமிட்டார்கள்.

அதன் முதல் வெளிப்பாடாக சின்னமருதுபாண்டியர் தலைமையில் திருச்சி ஆர்காட் நவாப் கோட்டைக்கும், திருவரங்கம் கோயிலுக்கும் சென்று ஆங்கிலேயருக்கு எதிரான போர் பிரகடனத்தை 1801 ஜூன் 16-ம் தேதி பகிரங்கமாக மக்கள் பார்வைக்கு ஒட்டினார்கள். இந்தச் செய்தியறிந்த ஆங்கில ராணுவம் இங்குள்ள துரோகிப் படையையும் இணைத்துக்கொண்டு சிவகங்கைப் பகுதியை முற்றுகையிட்டார்கள். இதில் நாட்டுமக்கள் ஆழ்ந்து கவனிக்கவேன்டியதும், ஒவ்வொருவருடைய இதயத்திலும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய செய்தி எதுவெனில், ஆங்கிலேயருக்கு எதிரான “ஆயுதமேந்திய மக்கள் புரட்சிக்கு” வித்திட்டு, களத்தில் நின்று இறுதிவரை போராடி, ஆங்கில ஆதிக்கத்திற்கும், இந்திய நாட்டின் விடுதலைக்காகவும் முதன்முதல் நெஞ்சுயர்த்தி ஆங்கிலேயர்களை களத்தில் சந்தித்து, தூக்குமேடைக்கு தன் குடும்பத்துடன் உயர்தியாகம் செய்த மருதுபாண்டியர்களின் நாட்டுப்பற்றும், அன்னியர் எதிர்ப்புணர்வும், எக்காலத்திலும் மறந்துவிடக்கூடிய நினைவலைகள் அல்ல மாறாக அந்த நினைவலைகள் ஓயாத கடல் அலைகளாகும்.

 

இந்த மண்ணில் பிறந்த, இனிப் பிறக்கவிருக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் இதயத்துடிப்போடும் இணைந்து துடித்துக்கொண்டே இருக்கவேண்டிய மான உணர்வாகும்!! இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான “போரப்பிரகடனத்தை” (Declaration of War) வெளியிட்டு ஆங்கிலப்படைகளையும் துரோகப் படைகளையும் போர்க்களத்தில் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, தங்கள் ஆண் வாரிசுகளையே முழுமையாக இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகம் செய்தவர்கள்! ஆனால், இந்த நிகழ்விற்குப்பின் 50 ஆண்டுகள் கழித்து 1857-ல் நடைபெற்ற “சிப்பாய்கள்” போராட்டத்தை முதல் சுதந்திரப்போராட்டம் என வரலாற்றில் பதிவு செய்திருப்பது எந்தவகையிலும் அடிப்படையில்லாத வரலாற்றுப்பிழையாகும்.

இங்கு தென்னகத்தில் நடைபெற்ற இந்தப் போர்க்களங்கள் தான் இந்திய நாட்டின் முதல் சுதந்திரப்போராட்டமாக இருக்கமுடியும், அதற்கான சான்றுகள் பல உண்டு. இந்த வரலாற்றுப்பிழையினை ஒன்றிய அரசு திருத்திக்கொண்டு இந்த தென்னாட்டுப் போர்க்களங்கள் தான் முதல் சுதந்திரப்போராட்டம் என அறிவிக்கவேண்டும். வரலாற்றில் 1919-ல் ஜாலின்வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையைவிட பன்மடங்கு கொடுமையும், கொடூரமும் நிறைந்த இந்த படுகொலைகள் நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மிகப்பெரிய அளவில் முதல் சுதந்திரப்போராட்ட வீரமரணங்கள் குறித்த நினைவிடங்கள் உள்ளடக்கிய வரலாறுகள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.


இந்த முயற்சிகளின் முன்னெடுப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைப்பதாக அறிவித்துள்ளார். தென்னகத்தின் இந்தப் போர்களங்கள் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்டம் என அறிவிக்கவும், அது தொடர்பான அருங்காட்சியகம் அமைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் உரிய ஒத்துழைப்புடன் செய்து முடிப்பதன் மூலம் நமது பழம்பெருமைகளும், புகழும், வீரமும் மீண்டும் உலகளவில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். இதுவே மருதுபாண்டியர்களுக்கும், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து தென்னகத்துப் போர்க்களங்களில் போராடி, உயிர்துறந்த, தூக்கிலிடப்பட்ட, நாடுகடத்தப்பட்ட முதல் சுதந்திரப்போராட்ட தீரர்களுக்கும் இந்த சிவந்த மண்ணில் உருவாக்கும் நினைவாலயம் காலம் கடந்தும் இந்த வரலாற்றின் அணையா விளக்காக என்றும் ஒளி பரப்பிக்கொண்டே இருக்கும்!!

 

பொன்.முத்துராமலிங்கம், பி.எ., பி.எல்.,

( முன்னாள் அமைச்சர், தி.மு.க.)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து

Halley Karthik

காதல் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள்!

Vandhana

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது – அண்ணாமலை

Web Editor