விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த காட்டுயானை!

திருப்பத்தூர் அருகே நாயக்கனூர் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானையை விடிய விடிய ஊர்மக்கள் போராடி விரட்டினர். தமிழகத்தில் இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.…

திருப்பத்தூர் அருகே நாயக்கனூர் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானையை விடிய விடிய ஊர்மக்கள் போராடி விரட்டினர்.

தமிழகத்தில் இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. அவ்வாறு ஊருக்குள் வரும் வன விலங்குகள்
விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது, பொதுமக்களை தாக்குவது போன்றவை வழக்கமாக உள்ளது.

அதுப்போன்ற ஒரு சம்பவம் திருப்பத்தூரிலும் தற்போது நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாயக்கனூரில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை சுற்றி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ஊருக்குள் புகுந்த காட்டுயானை ஆறுமுகம் என்பவரின் வயலில் இருந்த நெற்பயிர்கள், அன்பு என்பவரின் மாஞ்செடிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது.இதுகுறித்து ஊர் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டாமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஊர் மக்களே களத்தில் இறங்கி விடிய, விடிய போராடி யானையை காட்டுக்குள் விரட்டினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒற்றை தந்தத்தை உடைய காட்டுயானை பல ஆண்டுகளாக இப்பகுதியில் சுற்றி வருகிறது.தற்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறது.எனவே வனத்துறையினர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு யானைக்கு உரிய சிகிச்சை அளித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.