திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 30-ம் தேதியும், திருகல்யாண வைபவம் 31-ம் தேதியும் நடைபெறுகிறது.
கந்தசஷ்டி திருவிழாவில் கலந்துகொள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல் சிறப்பு இரயில்களும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை. தனிநபர் அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டும். கந்தசஷ்டி திருவிழாவிற்காக 2700-க்கும் மேற்பட்ட போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோயில் வளாகத்தினை சுற்றி 10-க்கும் மேற்பட்ட உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.திருச்செந்தூர் கடற்கரையினை கந்தசஷ்டி திருவிழாவிற்காக தூய்மைபடுத்த முதன்முதலாக நவீன சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் துவங்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








