நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் பெரும் இடையூறு- பிரதமர் மோடி உரை

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் என்பது நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும்…

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் என்பது நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று, பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் மாறிவிட்டது என்றார்.

 

டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தொழில் நுட்பங்களை 5 ஜி சேவைகள் மேலும் வலுப்படுத்தும் என கூறினார். சட்டங்கள் எளிமையான மற்றும் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும். இதனால் அதில் எழுதப்பட்டிருப்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும். நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாகும். நீதி கிடைப்பதில் தாமதம் என்பது நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும்.

குஜராத்தில் மாலை நேர நீதிமன்றங்களை தொடங்கினோம். இதில் சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதனால் நீதிமன்றங்கள் மீதான சுமை குறைகிறது. சட்டம்-ஒழுங்கு, சமூக முன்னேற்றத்துடன் ஒத்துப்போகும் போது நீதி எளிதாக இருப்பதை உறுதி செய்கிறது. அப்போது தான் இந்தியா உண்மையான அர்த்தத்தில் முன்னேற முடியும். காலாவதியான சமூக சட்டங்கள் ஒரே மாதிரியாக மாறினால் அவை முன்னேற்றத்துக்கு தடைகள் என்பதை நாம் அறிந்திருப்பதால் நமது சமூகம் அதிலிருந்து விடுபட்டுள்ளது என தெரிவித்தார்.

 

இம்மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பழமையான, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றுதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், மாநில சட்ட முறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.