கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை

துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இதுகுறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில்…

துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இதுகுறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய துருக்கியில் மீண்டும் இரண்டாவது நாளாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நான்காவது முறையாக  5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஒரே நாளில் 2300 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் பலி எண்ணிக்கை 1500 ஆகவும், சிரியாவில் 800 ஆகவும் உள்ளது. இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கின்றன.

https://twitter.com/Vairamuthu/status/1622922028239196160?t=1Rl2qsiVLi5OIfOWkO_tDg&s=08

இந்த சம்பவத்தை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தான் எழுதிய கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார். “துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும். கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்” என்ற கவிஞர் வைரமுத்துவின் அக்கவிதை இணையத்தில் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.