ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி, டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தைக் காண சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரும் வந்திருந்தார். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 190 ரன்கள் வரை எடுத்து சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்களும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷண் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய டிம் டேவிட் 46 ரன்கள் எடுத்தார். இவர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். பார்வையாளர்கள் அரங்கில் விளையாட்டை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த சாரா டெண்டுல்கர், டிம் டேவிட் ஆட்டமிழந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பெவிலியனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சாரா டெண்டுல்கரை நோக்கி மைதானத்தில் இருந்த கேமரா திரும்பியது. ரன் அவுட்டால் அவர் அதிர்ச்சியடைந்ததும் வீடியோவில் பதிவானது.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள டேவிட், 139 ரன்கள் எடுத்தார். கடந்த சீசனில் டிம் டேவிட், பெங்களூரு அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் அவரை ரூ.8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.








