காட்டுக்குள் புலிகளிடம் சிக்கிய இளைஞர்களில் 2 பேர் துடிதுடிக்கக் கொல்லப் பட்டனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பிலிபிட் (Pilibhit). வனப்பகுதியான இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அதே பகுதியை சேர்ந்த கந்தாய் லால் (35), சோனு குமார் (22), விகாஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். வனத்துக்குள் செல்லும்போது, ’புலிகள் அலையலாம். இப்போது செல்ல வேண்டாம்’ என்று செக்போஸ்டில் வன அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்காமல் மூன்று பேரும் சென்றனர்.
இரு சக்கர வாகனத்தின் ஹெட்லைட் சரியாக வேலை செய்யவில்லை. இந்நிலையில் திடீரென அவர்களின் வாகனம் சரிந்ததில் மூன்று பேரும் கீழே விழுந்தனர். அருகிலேயே சில புலிகள் நின்றிருந்தன. அவகாசம் கொடுக்காமல் மூன்று பேரையும் புலிகள் தாக்கின.
விகாஸ், ஹெல்மெட் அணிந்திருந்தார். அப்போது புலி ஒன்று விகாஸின் தலையை கவ்வியது. ஹெல்மெட்டை கடிக்க முடியாமல் விட்டுவிட்டது. அடுத்த நொடியில் கைக்கு அருகில் தட்டுப்பட்ட மரத்தைப் பிடித்து அவர், அதில் வேகமாக ஏறினார். கந்தாயும் ஒரு மரத்தை பிடித்து மேலே ஏற முயன்றார். அதற்குள் சில புலிகள் அவரை கீழே இழுத்து கதறக் கதறக் குதறின. சோனுவை காட்டுக்குள் இழுத்து சென்றன. அவரின் கதறல் நீண்ட நேரம் கேட்டிருக்கிறது.
தன் நண்பர்களை, புலிகள் கொன்றதை மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விகாஸ், அதிர்ச்சியில் உறைந்தார். இரவு முழுவதும் அவர் மரத்திலேயே இருந்தார். அவர் மரத்தில் இருப்பது தெரிந்திருந்தால், புலிகள் அவரையும் கொன்றிருக்கும். ஆனால், அவர் மூச்சு விடவில்லை.
அதிகாலையில் அங்கு வந்த கிராமத்தினர், இருசக்கர வாகனம் ஒன்று அங்கி கிடப்பதையும் அதன் அருகில் ஓர் உடல் கிடப்பதையும் கண்டனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விகாஸை கண்ட அவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மறுநாள் ஒருவரின் சிதைந்த உடல்பகுதி காட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசிய விகாஸ், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த புலிகள் என்னை கீழிருந்து தேடிக் கொண்டே இருப்பதைப் பார்த்தேன். காலையில் சில கிராமத்தினர் என்னை காப்பாற்றி கீழே இறக்கினர். புலிகளின் உறுமல் இன்னும் என் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன என்றார்.








