புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம்,விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரிக்கு வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.மணக்குள விநாயகர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. வண்ண வண்ண விளக்குகளாலும், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோயிலுக்கு வந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. சாமி தரிசனம் செய்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.