”அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை“ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில உள்ள தேன் விநாயகர் கோயிலில் அன்னதானம் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
”மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே விமர்சித்திருந்தார். இதனை கண்டித்து அப்போதே அதிமுக சார்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக மாநிலத் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தவே செயல்படுகிறார்.
அண்ணா ஒரு மிகப்பெரிய அறிஞர். அவரை சிறுமைப்படுத்தும் வகையில் சமீபத்தில் அண்ணாமலை பேசி உள்ளார். அதற்கு கண்டனம் தெரிவித்தபோதும் அண்ணாமலை திருந்தவில்லை. தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அவர் தொடர்ந்து கூட்டணி தர்மத்தை மீறுகிறார். பா.ஜ.க தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை லாயக்கு அற்றவர். பாஜக தமிழ்நாட்டில் தனியாக நின்றால் நோட்டாவிற்கு கீழ் தான் வாங்கும். அண்ணாமலை திருந்துவார் என நினைத்தோம். ஆனால் அவர் திருந்தவில்லை. அண்ணாமலையை இனி கடுமையாக விமர்சனம் செய்வோம்.
அவரது சிறுமைப்புத்தி குறித்து கடுமையாக விமர்சனம் செய்வோம். உங்களை தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் காலே இல்லை. பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றவே முடியாது. அண்ணாமலை பேசுவதை கட்டுப்படுத்துமாறு மேலிடத்திலும் கூறி உள்ளோம்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது கட்சியின் முடிவு. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அண்ணாமலை ஆர்கியாலஜி துறையில் இருக்க வேண்டியவர். பாஜக தேசிய தலைமையிடம் அண்ணாமலை குறித்து தெரிவித்தும் , அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்றால் மேலிடம் சொல்லி தான் இது நடக்கிறது என் நினைக்கிறேன். “
இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.







