தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ நினைவு நாள்: போலீஸார் குவிப்பு

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம…

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. ஒரு நபர் ஆணையம் சார்பிலான முழு அறிக்கை, நான்கு தினங்களுக்கு முன்னர் (மே 18) முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.  இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்நிகழ்வின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டுமன்றி, மாவட்டம் முழுக்க சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வெளிமாவட்டத்தினர் வருகை குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப் படத்திற்கு  குமரபரெட்டியாபுரத்தில் கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள  20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவபடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், வெளி மாவட்டத்தினர் யாரும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கபடவில்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸார் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியைச் சுற்றியுள்ள 63 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.