“அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தீய சக்திகள்” என திரைப்பட இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தீய சக்திகள் என்றும், சமூக விரோதிகளை இது அடையாளம் காட்டிவிட்டது என்றும் இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். மேலும், பொதுச் சொத்துகளை சேதம் விளைவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சாப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நல்ல திட்டங்கள் இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இளைஞர்களின் வேலையில்லாத பிரச்சனைகளை தீர்த்து தேசத்தின் மீது பற்று உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இதை பல்வேறு சமூக விரோதிகள் எதிர்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களும் இளைஞர்களும் பங்கேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவை வளர்ச்சி அடையாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இந்து இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
உண்மையான உணர்வுள்ள இந்தியன் இந்த நாட்டை காக்க ஒன்றுசேர்ந்து வென்று காட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்க வாய்ப்பிலலை. அவர்களை அடையாளம் காட்டி அப்புறப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.